A B c D E F G

About us

இலங்கை வானொலியின் தோற்றமும் - தமிழ் ஒலிபரப்பின் நதிமூலங்களும்...

தென் கிழக்காசியாவின் முதல் வானொலி என்ற பெருமைக்குரிய, எமது வானொலியின் பிதாமகராக மதிக்கப்படுபவர் , 1921ம் ஆண்டு இலங்கைத் தந்தித் திணைக்களத்தில் (Ceylon Telegraph department ) பணியாற்றுவதற் காக, இங்கிலாந்தில் இருந்து வருகை தந்த திரு, எட்வர்ட் ஹார்ப்பர் (Edward Harper). முதலாவது உலகமகா யுத்தம் (28 July 1914 to 11 November 1918) முடிவடைந்த பின்னர், இலங்கையில் தரை தட்டியிருந்த, "எம்டன்" ஜேர்மனிய நீர்மூழ்கிக் கப்பலில், சிதிலமடைந்திருந்த” வானொலிச் சமிக்ஞைக் கருவியை” ஒன்றிணைத்து சீரமைத்து, இயங்கவைக்கும் முயற்சியில் அவர் வெற்றி கண்டார். இந்தப்பணியில் அவருடன் இணைந்து பணியாற்றியவர்கள், இலங்கைத் தந்தித் திணைக்களத்தில் அன்று பணியாற்றிக்கொண்டிருந்த இலங்கைப் பொறியியலார்களான, ஏ.நடராசா, டபிள்யு.இ.டி.ஜயதிலக்க, பி.விஜயத்திலக்க ஆகிய மூவருமே. அம்மூவரை காலம் ஏனோ மறந்து விட்டது.


லண்டனில் முறையான வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாகிய மூன்று ஆண்டுகளுக்குள், இலங்கையில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. ஒரு கிராமபோன் கருவியில் இசைத்தட்டைச் சுழலவிட்டு அதன் முன்னால் ஒரு ஒலிவாங்கியை வைத்து ஒலிபரப்பியே, இந்தப் பரீட்சார்த்த ஒலிபரப்பை நடத்தினார்கள். அதன் பின்னர் படிப்படியாக நடந்த பரீட்சார்த்த முயற்சிகள் முன்னேற்றமடைந்து 1925 டிசம்பர் 16ம் திகதியன்று முறையான ஒலிபரப்பு இலங்கையில் ஆரம்பமானது. ஆரம்ப காலங்களில் கொழும்பு கோட்டையில் அமைந்திருந்த மத்திய தந்தித் திணைக்களத்தின் சிறு அறையில் இருந்தே "கொழும்பு அழைக்கிறது" என்ற பெயரில் அதுவும் ஆங்கில மொழியில் மட்டுமே ஒலிபரப்பு நடைபெற்று வந்தது, இசைத் தட்டுகளை ஒலிப்பரப்பி, இடையிடையே பங்குச் சந்தை நிலவரங்கள், தேயிலை, ரப்பர்,கொப்பறா விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டன. மலையகப் பகுதியில் பணிபுரிந்த வெள்ளைக்காரத் தோட்டத்துரைமாரின் பயன்பாட்டுக்காகவே இந்த ஒலிபரப்பு பெரும்பாலும் பயன்பட்டது. அதன் பின் தந்தித் திணைக்களத்தில் எழுதுவினைஞர்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்த தமிழ்,சிங்கள ஊழியர்கள் இடையிடையே தமிழிலும் சிங்களத்திலும் அறிவிப்புகளைச் செய்ய ஆரம்பித்தார்கள். அவ்வாறு பணியாற்ற ஆரம்பித்தவர்களில், முதல் தமிழ் அறிவிப்பாளராக வரலாற்றில் இடம்பிடித்தவர், "கரம்பொன்" என்னுமிடத்தைச் சேர்ந்த திரு,விநாயகமூர்த்தி என்பவரே. இவர்தான் பங்குச் சந்தை நிலவரங்களோடு, தமிழ்ப் பத்திரிகைச் செய்திகளை, முதன்முதலாக வானொலியில் வாசிக்க ஆரம்பித்தவர்.


தந்தித் திணைக்களத்தின் சிறு அறையில் இருந்த இந்த ஒலிபரப்பு 1926ம் ஆண்டு கொழும்பு சர்வகலா சாலையில் (இப்போதைய பல்கலைக் கழகத்தில் ) ஒரு கலையகம் அமைக்கப்பட்டு இடம் மாற்றப்பட்டது. மறு ஆண்டே, அங்கிருந்தும் இடம்மாற்றப்பட்டு 1927ல் தற்போது வானொலி நிலையம் இயங்கும் (Torrington) இடத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறையும் , ஒரேயொரு கலையகமும் கொண்ட ஒரு சிறிய கட்டிடத்தில் இயங்க ஆரம்பித்தது. அப்போதும் ஆங்கிலத்துக்கே முன்னுரிமை. அதனை அடுத்து சிங்களம், பின்னர் தமிழ் என மும்மொழிச் சேவையும் ஒரே அலை வரிசையில் இயங்கின. இரண்டாவது உலகமகா யுத்தம் (1 September 1939 – 2 September 1945- (6 years and 1 day) ஆரம்பமான போது, குதிரைப் பந்தய மைதானமாக இருந்த அப்பகுதியில், கூட்டுப் படைகளின் “விமான ஓடு பாதை” அமையவிருந்ததால், பாதுகாப்புக் கருதி, பொரளை கொட்டாரோடில் அமைந்திருந்த BOWER HOUSE (பவர் ஹவுஸ்) எனும் ஒரு இல்லத்திற்கு “கொழும்பு வானொலி” மாற்றப்பட்டது.


அங்கு சிங்கள ஒலிபரப்புக்கென திரு.கொலம்பகே என்பவர் நியமிக்கப் பட்டது போல் தமிழுக்கும் ஒருவரை தெரிவுசெய்யவேண்டும் என்ற தேவை வந்தபொழுது, 1937ம் ஆண்டு நிரந்தரத் தமிழ் அறிவிப்பாளராகவும் தமிழ் நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாளராகவும் நியமனம் பெற்றவர், நவாலியூர் சோமசுந்தரப்புலவரரின் புதல்வரான, திரு சோ.நடராசா அவர்கள். இரண்டாம் உலகயுத்தயுத்தச்செய்திகளை மக்களுக்கு அறிவிக்கும் ஒரு தமிழ்ப் பத்திரிகையின் பொறுப்பாசியர் பதவியை ஏற்று திரு.சோ.நடரசா விலகிச் செல்லவே, இடைக்கால பொறுப் பாளராகவும் அறிவிப்பாளராகவும் இணைந்தவர் பின்னாளில் வானொலி மாமா என அறியப்பட்ட திரு.சரவணமுத்து அவர்கள். ஆயினும் அவர் வேறு ஒரு அரச திணைக்களத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த மையினால் அப்பொறுப்பினை பகுதிநேரத் தொழிலாகவே செய்துகொண்டிருந்தார். எனவே மீண்டும் ஒருவரைத் தேடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதற்காக நடந்த நேர்முகத்தேர்வில், வடக்கில் இருந்து வெளிவரும் "ஈழகேசரி" பத்திரிகையில் பொறுப்பாசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த திரு. சோ.சிவபாத சுந்தரம் அப்பதவிக்கு நியமிக்கப்படுகிறார். தனியொருவராக அனைத்துப் பொறுப்புகளையும் அவர் ஏற்று நடத்திவரும்போது அது பெரும் சுமையாகவே இருப்பதை சிறிது காலம் கழித்து, நிர்வாகம் உணர்ந்தபோது, சிங்கள சேவையிலும், தமிழ் சேவையிலும் மேலதிகமாக ஒருவரை நியமிக்கவேண்டும் என்று முடிவெடுக்கப்படுகிறது. மூன்றாவது தமிழ் ஒலிபரப்பாளராக இணைந்தவர் தான், திரு வி.என்.பாலசுப்ரமணியம். நிறைந்த கர்னாடக இசைப்புலமை கொண்டவர். ஒருதடவை அவ்விருவரும் சேர்ந்து ஒரு இசைநிகழ்ச்சிக்குப் போகவேண்டிய தருணம் வந்தபோது, அன்று ஒலிபரப்பின் கட்டுப்பாட்டு அறையில் ஒரு பொறியிலாளராகக் கடமையாற்றிக்கொண்டிருந்த திரு.குஞ்சிதபாதம் அவர்களிடம், நிகழ்ச்சிகளை அறிவிப்புச் செய்து ஒலிபரப்பும் பொறுப்பினைத் தற்காலிகமாக விட்டுச் சென்றபோதுதான் அவருக்குள் இருந்த திறமை வெளிப்பட்டு ஒரு ஒலிபரப்பாளராக மாறும் காலத்திற்கு வித்திடப்பட்டது. தமிழ் ஒலிபரப்பு, ஓரளவு விரிவடைய ஆரம்பித்த காலத்திலே, தமிழ்ச் சேவையை வழிநடத்த, ஒரு “ஆலோசனைச் சபை” 1946ம் ஆண்டிலே நிறுவப்பட்டது. அதில் இடம்பெற்றவர்கள் சுவாமி விபுலானந்த அடிகள், அல்ஹாஜ் ஏ.எம்.ஏ. அஸீஸ், கலாநிதி. கணபதிப்பிள்ளை, ஏ.எம்.கே.குமாரசாமி.பேராசிரியர். வி.செல்வநாயகம் முதலியார், ஏ.பி.ராஜேந்திரா, கே.கனகரத்தினம், எம்.எஸ்.திருவரங்கம், மு.ராமலிங்கம் ஆகியோர்.


1948ம் ஆண்டு திரு.சோ.சிவபாத சுந்தரம் அவர்கள், லண்டன் பி.பி.சி.யில் தமிழ் நிகழ்ச்சியைப் பொறுப்பேற்க அழைக்கப்பட்டபோது, அந்த வெற்றிடத்திற்கு நான்காவது தமிழ் அறிவிப்பாளராக திரு.குஞ்சிதபாதம் அவர்கள் நியமிக்கப்படுகிறார். எமது வானொலி வரலாற்றில் முதல் தமிழ்ப் பெண் அறிவிப்பாளர் என்ற பெருமை, திருமதி. செந்திமணி மயில்வாகனன் அவர்களையே சாரும். செய்தி வாசிப்பில் தனி முத்திரை பதித்தவர். அதுபோல், எமது வானொலியின் தமிழ் நிகழ்ச்சி அதிகாரியான முதல் பெண்மணியாக விளங்கியவர். திருமதி ஜோசெப் என அழைக்கப்பட்ட "மோனி எலியாஸ்' அவர்கள். திரு. சோ.சிவபாதசுந்தரம் அவர்கள் லண்டன் பி.பி.சி.க்கு சென்றபின்னர் அப்பொறுப்பினை ஏற்றார்.


2ம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்னர், இலங்கையின் வானொலி ஒலிபரப்பு விஸ்தரிக்கப்படவேண்டிய தேவையை அரசு உணர்ந்தது. அதற்கான நிதியும் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. முன்பு சிறிய கட்டிடத்தில் வானொலி இயங்கிய டொரிங்டன் பகுதியிலேயே வானொலிநிலையம் மீண்டும் இயங்குவதற்காக மிகப்பெரிய கட்டிடத்தொகுதியொன்றின் கட்டுமானப் பணிகள் 1948ம் ஆண்டின் இறுதியில் ஆரம்பமாகின.
1950ம் ஆண்டு மலர்ந்தது. ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி அலைவரிசைகள், பத்து கலையகங்கள்- அவற்றில் பார்வையாளர் அரங்குடன் கூடிய பெரியதொரு கலையகம். மூன்று தொடர்புக் கலையகங்கள், , மிகப்பெரிய கட்டுப்பாட்டு அறை , இசைத்தட்டுக் களஞ்சியம், சிற்றுண்டிச் சாலை, வரவேற்பறை, விருந்தினர் அறை. என மிகப் பிரம்மாண்டமாய் அமைந்த இன்றைய கட்டிடத்தொகுதியில் எமது வானொலிக் குடும்பத்தின் குடியேற்றம் நடந்தது. அப்போது அதன் பெயர் "ரேடியோ சிலோன்”.


அவ்வாண்டின் இறுதியிலேயே, தென்கிழக்காசியாவிலேயே முதன் முறையாக, “வர்த்தக ஒலிபரப்பு” எனும் புது வடிவம் ஒலி ஊடகத் துறையில் அறிமுகமானது. அந்நாளில் "கொழும்புத் திட்டத்தின்" கீழ் அவுஸ்திரேலியாவில் இருந்து அழைக்கப்பட்ட, திரு.கிளிபர்ட் டொட் அவர்கள் தான் எமது வானொலி வர்த்தக ஒலிபரப்பின் பிதாமகர். அவர் ஏற்கனவே நியூசிலாந்து, அவுஸ்திரேலிய நாடுகளில் வானொலித் துறையில் பணியாற்றிய நிறைந்த அனுபவம் கொண்டவராக விளங்கியவர்.
2ம் உலகமகா யுத்தத்தின்போது ராணுவத் தேவைகளுக்காக 1943ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட SEAC (South East Asian Command ) எனும் அமைப்பு பயன்படுத்திய சிற்றலை வரிசையும், ,ஒலிபரப்பிச் சாதனங்களும் யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது,. அந்த சாதனங்களும் 25 மீற்றர் எனும் சிற்றலை வரிசையுமே இந்த வர்த்தக ஒலிபரப்புக்குப் பயன்படுத்தப்பட்டன. 1950- செப்டெம்பர் 30ம் திகதி இலங்கை வானொலியின் “வர்த்தகசேவை” உதயமானது. முதன் முதலாக "எவரெஸ்ற்" சிகரத்தில் ஏறிச் சாதனை படைத்த டென்சிங்-ஹிலாரி இருவரும், அச் சிகரத்தின் உச்சியில் தாம் கேட்ட ஒரே வானொலி என இந்த ஒலிபரப்பைத் தான் "கின்னஸ்" சாதனைப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். குறிப்பாக தென்கிழக்காசிய நேயர்களுக்காக ஒலிபரப்பான இந்த வர்த்தக சேவையினை இலங்கை நேயர்களும் கேட்கக் கூடியதாக இருந்தும் ஆரம்ப காலத்தில் ஆங்கிலத்திலேயே இந்த ஒலிபரப்பு நடைபெற்றது. 1951ம் ஆண்டு, முதன்முதலாக “கல்விச் சேவை” ஆரம்பிக்கப்பட்டது. மூன்று மொழிகளிலும் ஆரம்பிக்கப்பட்ட இச் சேவையின் தலமைப் பொறுப்பினை ஏற்றவர், முன்பு தமிழ் நிகழ்ச்சிப் பொறுப்பதிகாரியாக இருந்த திருமதி ஜோசெப் என்ற மோனி எலியாஸ் அவர்கள்.


தேசிய சேவை, வர்த்தக சேவை, கல்விச் சேவை என மூன்று பிரிவுகளாகத் தொடர்ந்த வானொலி நிலையத்தில், தேசிய சேவையில், தமிழ் நிகழ்ச்சி அதிகாரியாக நாவற்குழியூர் நடராசா, அறிவிப்பாளர்களாக திரு. எஸ்.புண்ணியமூர்த்தி, வி.ஏ.கபூர், திரு.சுந்தரலிங்கம் என பல புதிய ஒலிபரப்பாளர்கள், தயாரிப்பாளர்களாக, திரு.சண்முகநாதன்(சானா) விவியன் நமசிவாயம், வி.ஏ.சிவஞானம், ஞானம் ரத்தினம், பாலசுப்ரமணியம், சி.வி.ராஜசுந்தரம், எனப் பல ஊழியர்களைக் கொண்டு பல்கிப் பெருகியது தேசிய சேவை. ஆனால் வர்த்தக சேவையோ, திரு. கிளிபர்ட் டொட் தலைமையில் ஒருசில ஊழியர்களை மட்டுமே கொண்டு இயங்கிவந்தது. தென்கிழக்காசிய நேயர்களுக்கான வர்த்தக ஒலிபரப்பு, வட இந்தியாவில் அதிக வரவேற்பினைப் பெற்று வருவதை உணர்ந்து, முதன் முதலாக ஹிந்தி மொழி ஒலிபரப்பினை இந்த 25 மீற்றர் சிற்றலை வரிசையில், 1951 மார்ச் 30ம் திகதி ஆரம்பித்தார்கள். அந்நாளில் வட இந்திய நடனக் கலையினை இலங்கையில் கற்பிக்க வந்திருந்த நடன ஆசிரியர் திரு.சுகேந்த் தத்" என்பவரே இந்த ஹிந்திச் சேவையில் இணைந்த முதலாவது அறிவிப்பாளர். அந்நாளில் இந்திய ஒலிபரப்புத்துறை அமைச்சராயிருந்த கேஷிகர், அகில இந்திய வானொலியில் சினிமாப் பாடல்களை ஒலிபரப்ப விதித்திருந்த தடை, முழுக்க முழுக்க ஹிந்தித் திரையிசைப் பாடல்களைக்கொண்டு நடத்தப்பட்ட இந்த ஹிந்திமொழி ஒலிபரப்புக்கு மிகப்பெரிய வாய்ப்பாகப் பயன்பட்டது. ஆரம்பித்த சிலநாட்களுக்குள்ளேயே லட்சக்கணக்கான நேயர்களின் வரவேற்பினைப் பெற்றது மட்டுமல்ல விளம்பரங்களின் மூலம் மடைதிறந்த வெள்ளம்போல் வருமானம் வந்து கொட்ட ஆரம்பித்தது.


இலங்கை வானொலியின் பிரதிநிதியாக வட இந்தியாவில் மும்பையில் நியமிக்கப்பட்ட “ரேடியோ அட் வார்டைசிங் சர்வீஸ்” என்ற விளம்பர முகவர் மூலம், விளம்பரங்களும், விளம்பர நிகழ்ச்சிகளும் மும்பையில் ஒலிப்பதிவு செய்து அனுப்பிவைக்கப்பட்டன. பின்னாளில் நடிகராகப் புகழ்பெற்ற சுனில் தத் அவர்கள்கூட, ஆரம்பகாலங்களில் இலங்கை வானொலி வர்த்தக நிகழ்ச்சிகளில் குரல்கொடுத்தவர்தான். அத்தகைய நிகழ்ச்சிகளில் "பினாகா கீத் மாலா" எனும் நிகழ்ச்சியின் மூலம் உலகப் புகழ்பெற்றவர்தான் அமீன் சயானி. அதன் பின் ஒப்பந்த அடிப்படையில் ஹிந்தி மொழி அறிவிப்பாளர்கள் இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்டு இங்கு பணியாற்ற ஆரம்பித்தார்கள். இதே 1951ம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி, உள்நாட்டு நேயர்களுக்காவும் மத்திய அலை வரிசையில் ஒரு வர்த்தக ஒலிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது. முதல் முதலில் அறிவிப்பாளர் களாகத் தெரிவுசெய்யப்பட்டவர்கள் திரு புரோஸ்பர் பெர்னாண்டோ, திரு. டான் துரை ராஜ் ஆகிய இருவருமே. இவர்கள் இருவரும்கூட ஆங்கிலத் திலேயே அறிவிப்புகளைச் செய்துவந்தாலும், இடையிடையே திரு.புரோஸ்பர் பெர்னாண்டோ, சிங்கள மொழியிலும், திரு டான் துரைராஜ் தமிழிலும் சில அறிவிப்புகளையும் விளம்பரங்களையும் வாசித்தார்கள். 1951 ஜூலை மாதம் முதல், தமிழுக்கென்று அரைமணி நேரம் ஒதுக்கப்பட்டது. காலை 10மணி முதல் 10.30 வரை தமிழ்,11 முதல் 12 மணிவரை சிங்களம். மீண்டும் மாலை 5முதல் 7மணிவரை சிங்களம் என்ற அடிப்படையில் ஒலிபரப்பு, நடைபெற்றது. தமிழில், தென்னிந்தியத் திரைப்படப் பாடல்கள் ஒலிபரப்பானது போல், சிங்கள வர்த்தக ஒலிபரப்போ வட இந்திய ஹிந்தித் திரை இசைப் பாடல்களைக் கொண்டே நடைபெற்று வந்தது.1952ம் ஆண்டு தமிழ் வர்த்தக ஒலிபரப்பு, ஒருமணி நேரமாக அதிகரித்தது. ஆங்கில சேவையின் நேரமும் அதிகரிக்கப்பட்டது. இந்த வேளையில் திரு.டான் துரைராஜ் முழுநேர ஆங்கில அறிவிப்பாளராக இணைந்துகொண்டதால் வானொலி நிலையத்தில் எழுதுவினைஞராகப் பணியாற்றிக்கொண்டிருந்த திரு.ஜஸ்டின் ராஜ்குமார் பகுதிநேர அறிவிப்பாளராக. தமிழில் அறிமுகமானார். 1953ம் ஆண்டு திரு.கிறிஸ்டி கந்தையா என்பவர் ஒப்பந்த அடிப்படையில் தமிழ் வர்த்தகசேவையின் அறிவிப்பாளராக நியமனம் பெற்றார். கிறிஸ்டி கந்தையாவின் காலத்திலேதான் 1953ம் ஆண்டு ஆசிய சேவையிலும் முதன் முதலாக தமிழ் ஒலிபரப்பு ஆரம்பமானது. மாலை 5 முதல் 7 மணிவரை இந்த ஒலிபரப்பு நடைபெற் று வந்தது.எனவே அவருடன் பகுதிநேர அறிவிப்பாளராக திரு.ஜஸ்டின் ராஜ்குமாரும் தொடர்ந்து தனது பங்களிப்பினை நல்கிவந்தார். ஓராண்டு மட்டுமே பணியாற்றிய திரு.கிறிஸ்டி கந்தையா, எதோ காரணத்தால் விலகிச் செல்லவே, நிரந்தரமாக ஒரு அறிவிப்பாளரைத் தேடும் முயற்சி ஆரம்பமாகியது. அதற்காக நடந்த தேர்வில் 1954ம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் தெரிவானவர்தான் பின்னாளில் தமிழ் வர்த்தக சேவையின் பிதாமகர் எனப் போற்றப்பட்ட திரு.எஸ்.பி.மயில்வாகனன் அவர்கள். காரணம் அவரது காலத்திலேதான் தமிழ் வர்த்தகசேவையின் புகழ் கடல்கடந்து தமிழகமெங்கும் பரவியது. திரு. மயில்வாகனன் நிரந்தர அறிவிப்பாளராக நியமனம் பெற்றபின்னர், நிரந்தர அறிவிப்பாளராக இணைந்தவர், ஒரு பட்டதாரி ஆசிரிராக ஹட்டனில் பணியாற்றிக்கொண்டிருந்த திரு எஸ்.கே,பரராஜசிங்கம் அவர்கள். இவர்கள் இருவரும் வகுத்த ஒழுக்க விதிகளைப் பின்பற்றியே, பின்னாளில் வந்த பல ஒலிபரப்பாளர்கள் எமது வர்த்தக ஒலிபரப்பினை ஒரு முன்னோடி வானொலிச் சேவையாக உலக அரங்கிலே உயர்த்திவைத்தார்கள்.


தேசியசேவையில் நன்றியுடன் நினைவு கூறப்படவேண்டியவர்கள் - லண்டனில் பி.பி.சியின் "தமிழோசையை" ஆரம்பித்த எமது வானொலியின் முன்னோடியும், "ஒலிபரப்புக் கலை" எனும் நூலை முதன்முதலாக எழுதியவருமான திரு.சோ.சிவபாதசுந்தரம் அவர்கள். செய்தி வாசிப்பில் முத்திரை பதித்த திரு,குஞ்சிதபாதம், திரு வி.ஏ.கபூர், எஸ்.புண்ணியமூர்த்தி, சிறுவர் நிகழ்ச்சியை முதன்முதலாக வானொலியில் ஆரம்பித்த திருமதி ஞானதீபம் சிவபாத சுந்தரம், முதல் நாடகத்தொடரை தயாரித்து வழங்கிய திரு.வி.என்.பாலசுப்ரமணியம் அவரையடுத்து வானொலி நாடகத் தந்தை எனப் போற்றப்படும் "சானா" சண்முகநாதன், தமிழ்சேவையின் பணிப்பளர்களாக அளப்பரிய பணியாற்றிய திரு.கே.எஸ்.நடராஜா, பொன்மணி குலசிங்கம், மற்றும் சீ.வி.ராஜசுந்தரம், ஞானம் ரத்தினம், வி.ஏ.சிவஞானம், வி.ஏ.கபூர், எஸ்.புண்ணிய மூர்த்தி, அப்பல்லோ "சுந்தா", வி.பி.தியாகராஜா, என்.சிவராஜா, முஸ்லீம் சேவையின் எம்.எச்.குத்த்தூஸ், இஸட்.எல்.எம்.மொஹமட், என மூத்தவர் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இக்கட்டுரையில் விடுபட்டவர்கள் பற்றிய தகவல்கள் இந்த இணையதளத்தில் தொடர, ( தவறான தகவல்களை இணையத்தளம் மற்றும் பத்திரிகைகளில் இருந்து வெட்டி ஓட்டாமல்) உண்மையான தகவல் தெரிந்தவர்கள் மட்டும் உதவ முன்வரவேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன்.

B.H. அப்துல் ஹமீத்

About our team

Vestibulum justo

Integer semper, velit ut interdum malesuada, diam volutpat. Nulla porttitor tortor at nisl. Nam lectus nulla, bibendum pretium, dictum a, mattis dictum et, pulvinar non.

Nulla mauris ipsum

Integer semper, velit ut interdum malesuada, diam volutpat. Nulla porttitor tortor at nisl. Nam lectus nulla, bibendum pretium, dictum a, mattis dictum et, pulvinar non.

Fusce vulputate nibh

Integer semper, velit ut interdum malesuada, diam volutpat. Nulla porttitor tortor at nisl. Nam lectus nulla, bibendum pretium, dictum a, mattis dictum et, pulvinar non.

Nulla mauris ipsum

Integer semper, velit ut interdum malesuada, diam volutpat. Nulla porttitor tortor at nisl. Nam lectus nulla, bibendum pretium, dictum a, mattis dictum et, pulvinar non.

FIND US ON+